court

img

9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா..... நீதி கிடைப்பது கடினமாகிறதா?

இந்தியாவில் ஒன்பது மேல்முறை யீட்டுத்தீர்ப்பாயங்களைக் கலைத்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நீதித்துறை தொடர்புடையவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

சென்னையை தலைமையிடமாகக் கொண்டுஇயங்கி வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. புவிசார் குறியீடு, வணிகச் சின்னம், காப்புரிமை, உரிமை மீறல்உள்ளிட்டவற்றின் மேல்முறையீட்டு வழக்குகளை இந்தத் தீர்ப்பாயம் விசாரித்து வந்தது.இதேபோல், சினிமாட்டோகிராப் சட்டம் 1952-ன்படி அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், வருமான வரிச் சட்டம் 1961-ன்படிஅமைக்கப்பட்ட அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையகம், இந்திய விமான நிலைய ஆணையகச் சட்டம் 1994-ன்படி அமைக்கப்பட்ட விமான நிலைய மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், தாவர வகை மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001-ன்படிஅமைக்கப்பட்ட தாவர வகைப் பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்பட 9 மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை மத்திய அரசு கலைத்துவிட்டது.இதுவரையில் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களே விசாரிக்கும் எனவும்மத்திய அரசு அறிவித்துவிட்டது. இதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது.

உற்சாகப்பட வைத்த தீர்ப்பு
இந்தத் தீர்ப்பாயத்தில், ஓர் ஓய்வுபெற்ற நீதிபதி இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயத்துக்கேற்ற உறுப்பினரைக் கொண்டு அமைக்க வேண்டும் எனவும் முடிவானது. தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு அடுத்தபடியாக மேல்முறையீடுகளை மட்டுமே உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கிலும் இவை உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து தீர்ப்பாயங்களைக் கலைத்துவிட்டு உயர் நீதிமன்றத்துக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தீர்ப்பாயங்களைக் கலைத்துவிட்டு அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளித்துள்ளனர். 1997 ஆம் ஆண்டு சந்திரகுமார்எதிர் யூனியன் ஆஃப் இந்தியா என்றொரு வழக்குவந்தது. அந்த வழக்கில், `தீர்ப்பாயங்களில் கொடுக்கப்படும் உத்தரவுகளை உச்சநீதிமன்றத்துக்குச் சென்றுதான் மேல்முறையீடு செய்யவேண்டும்’ என்ற பிரிவை மாற்றி, `தீர்ப்பாயங்களில் கொடுக்கும் உத்தரவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலேயே தீர்வு பெற்றுக் கொள்ளலாம்’ என்ற உத்தரவு வெளியானது. இதனால் வழக்காடிகள் உற்சாகப்பட்டனர்.

தேங்கப்போகும் வழக்குகள்
ஆனால், இப்போது தீர்ப்பாயங்களே இருக்கக்கூடாது, அந்தத் தீர்ப்புகளை உயர் நீதிமன்ற நீதிபதிகளே வழங்கலாம் எனக் கொண்டு வந்துள்ளனர். இதனால் உயர் நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஏற்கெனவே, நீதிபதிகள் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர். வழக்கறிஞர்களாலும் வழக்குகளை நடத்த முடிவதில்லை. அதிகபட்சமாக 72 நீதிபதிகள் தேவை என்றால் சென்னை உயர் நீதிமன்றத்தில் 62 நீதிபதிகள்தான் உள்ளனர். இதனை நிரப்புவதற்கும் வழியில்லை. இந்த ஆண்டில் பல பேர் ஓய்வு பெறஉள்ளனர். அடுத்த ஆண்டு 5 பேர் ஓய்வு பெற உள்ளனர். இப்படியுள்ள சூழலில், அனைத்து வழக்குகளும் சென்னை உள்பட அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுக்கு வர உள்ளது.

மத்திய அரசின் புதிய நடைமுறை காரணமாக, தீர்ப்பாயங்களில் பணியாற்றிய ஊழியர்கள்
எல்லாம் எங்கே போவார்கள் என்பதற்கு தெளிவான வரையறைகள் இல்லை. தீர்ப்பாய வழக்குகளைக் கையாண்டவர்கள் எல்லாம் அதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அங்கேதவறு ஏற்பட்டால் மட்டுமே உயர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். தீர்ப்பாயத்தில் ஓரிரு ஆண்டுகளில் வழக்கு முடிந்துவிடும். இனி அந்த வழக்குகளை எல்லாம் உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்குக் கொண்டு வர 3, 4 ஆண்டுகள் ஆகிவிடும். இதுதொடர்பாக, எந்த விசாரணையும் நடத்தாமல் மத்திய அரசு முடிவெடுத்திருப்பது சரியானதல்ல. இதனால் பெரிய மாற்றங்கள் வந்துவிடப் போவதில்லை. மேலும், மேலும் காலதாமதம் ஏற்படவே வழிவகுக்கும்” என்கிறார் ஆதங்கத்துடன். 

நன்றி: பிபிசி

;